இரணைமடு குளம் தொடர்பாக நீர்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்
இரணைமடு குளம் தொடர்பாக நீர்பாசன திணைக்களம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.
இதன்படி, இரணைமடு குளத்திற்கு அதிக நீர் வருகை காணப்படுவதால் நாளை அதிகாலை 4.00 மணியளவில் வான் கதவுகள் திறக்கப்படலாம் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், கால்நடைகள், வாழ்வாதாரங்கள் தொடர்பிலும் அதிகம் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இரணைமடுகுளத்திற்கு மேல் பகுதியில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் குளத்தை நோக்கி அதிக நீர் வருகை தருவதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
நீர் வருகையை அடிப்படையாகக் கொண்டு வான்கதவுகள் திறக்கப்படும் அளவு தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
படிப்படியாக வான்கதவுகள் திறக்கப்படும் எனவும், அறிவுறுத்தலிற்கு அமைவாக மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும், குளங்கள் வான்பாய்வதாலும் மக்கள் இடர்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில், கிராம சேவையாளர் உள்ளிட்ட கிராம மட்ட உத்தியோகத்தர்கள், காவல்துறையினர், இராணுவத்தினரின் உதவிகளை நாடுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |