கிளிநொச்சியில் நடைபெற்ற மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி! ஓர் வரலாற்று பதிவு (படங்கள்)
கிளிநொச்சி மாவட்டத்தில் ஓர் வரலாற்றுச் சாதனையை “கிளி. மரதன் ஓட்டப் போட்டி” பதிவு செய்துள்ளது.
இரணைமடு குளத்தடியில் இருந்து பரந்தன் சந்தி வரையான மரதன் ஓட்டம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு (KILI People) அமைப்பின் ஏற்பாட்டில் இரண்டாவது வருடமாக இன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பல அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளின் ஆசிகள் மற்றும் ஒத்துழைப்புடன் இப்போட்டி ஆரம்பமாகியது.
கிளி. மரதன் ஓட்டப் போட்டி
270 இற்கும் அதிகமான ஆண் வீரர்கள் மற்றும் 75 இற்கும் அதிகமான பெண் வீராங்கனைகள் போட்டியாளர்களாக பங்கு பற்றினார்கள். இதில் 56 பெண் வீராங்கனைகளும், 156 ஆண் வீரர்களும் முழுமையாக ஓடி முடித்தனர்.
ஆண்கள் தரப்பில் முதலாம் (01) இடத்தை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீரரும், இரண்டாம் (02) இடத்தை யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவரும், மூன்றாம் (03) இடத்தை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வீரரும் தனதாக்கிக் கொண்டனர்.
முறையே 1,2,3 ஆம் இடத்திற்கான வெற்றிப் பரிசாக 100,000, 50,000, 25,000 என பெற்றுக் கொண்டனர்.
பெண்கள் தரப்பில் முதலாம் (01) இடத்தை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனையும், இரண்டாம் (02) இடத்தை முல்லைத்தவு மாவட்டத்தைச் சேர்ந்தவரும், மூன்றாம் (03) இடத்தை யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனையும் தனதாக்கி கொண்டனர்.
முறையே 1,2,3 ஆம் இடத்திற்கான வெற்றி பரிசாக 100,000, 50,000, 25,000 என பெற்றுக் கொண்டனர்.
குறிப்பாக பெண்கள் தரப்பில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வீராங்கனை திருமணமானவர் என்பதுடன், கணவர் மற்றும் மகனுடன் போட்டிக்கு வருகை தந்து வெற்றி ஈட்டினார்.
பாராட்டப்பட வேண்டிய சாதனை
பெண்கள் தரப்பில் இவ்வாறான சாதனைகள் என்பது பாராட்டப்பட வேண்டியதாகும்.
அத்தோடு ஆண், பெண் வீர வீராங்கனைகள் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வருகை தந்து கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ச்சியாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஒன்றையும் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
குறித்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு போருக்கு பின்னர் தமது மாவட்டத்தில் கல்வி, கலை, கலாசார, விளையாட்டு என சகல துறைகளிலும் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
குறித்த மரதன் ஓட்டப் போட்டிக்கு முழு அனுசரணையை லண்டனில் இயங்கும் அபியகம் வழங்கி இருந்தது.