கோட்டாபயவினால் முடிந்தது அமைச்சர்களினால் முடியாமல் போனது ஏன்? தயாசிறி கேள்வி
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக, பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்தால், எரிபொருளுக்காகச் செலவிடப்படும் பெருமளவான பணத்தை சேமிக்க முடியும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுசெயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
கொழும்பு - ஜாவத்தை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
யுத்த காலத்தில் இருந்ததைப் போன்று, அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தற்போது பாதுகாப்பு அவசியமில்லை. ஆகையினால், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புக்காக தமக்குப் பின்னால் பயணிக்கும் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கூட, தம்முடன் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளார்.
பாதுகாப்பு வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்களாயின், அவர்கள் தற்போதைய சந்தர்ப்பத்தில் இதனை அர்ப்பணிப்புச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.