நள்ளிரவில் நடந்தேறிய ஒப்பந்தம்! சிறிலங்காவிற்கு ஏற்படவுள்ள அச்சுறுத்தல் - இராஜாங்க அமைச்சர்
அமைச்சரவை அனுமதி இன்றியும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமலும் ஒப்பந்தம் நள்ளிரவில் கைச்சாத்திட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களுக்கு ஆதரவு வழங்க முடியாது. இதன் காரணமாகவே இவ்விடயம் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.
கெரவலபிட்டிய மின்நிலையத்தின் யுகதணவி நிலைய பங்குகளின் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்திற்கு சிறிலங்கா பொதுசன பெரமுன கூட்டணியின் அங்கம் வகிக்கும் 10 பிரதான பங்காளிகள் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.
இவ்விடயம் தொடர்பான சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தீர்மானமின்றி நிறைவுப் பெற்றுள்ளது.
சிறிலங்கா அதிபர் நாடு திரும்பியவுடன் ஒரு தீர்வை எடுப்பதற்கான பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.
நாட்டில் உள்ள அனைத்து மின்நிலையங்களுக்கும் எரிபொருளை விநியோகிக்கும் உரிமை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை நாட்டின் இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.