அதிபர் தேர்தலுக்காக பரந்துபட்ட கூட்டணியை அமைக்க முயற்சி : குமார வெல்கம சுட்டிக்காட்டு
ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதிபர் பதவிக்காக போட்டியிடுவதற்கு முன்வந்தால் எமது கூட்டணி அவரை பொதுவேட்பாளராக ஏற்று ஆதரிப்பதற்கு தயாராக உள்ளதாக புதிய சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.
இதேவேளை நாம் ரணில் விக்ரமசிங்கவின் முடிவினை எதிர்பார்த்துள்ள நிலையில் அவர் தீர்மானத்தை அறிவிக்க வேண்டியவராக உள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிபர் தேர்தல்
“அடுத்து அதிபர் தேர்தலை முகங்கொடுக்கும் முகமாக பரந்துபட்ட கூட்டணியொன்றை ஸ்தாபிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முன்னாள் அதிபர் சந்திரிகாவின் ஆலோசனையில், ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, புதிய கூட்டணியின் ஏற்பாட்டாளர் நிமல் லன்சா, மற்றும் சுதந்திரக்கட்சியின் மைதிரிபால சிறிசேன ஆகிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தரப்பினருடன் இன்னமும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. எனினும் ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் நேர்மறையாக உள்ளன.
இதேவேளை, அடுத்துவரும் நாட்களில் ஐக்கிய தேசியக்கட்சி, பொதுஜனபெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய தரப்பினருடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால்
என்னைப்பொறுத்தவைரயில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதிபர் பதவிக்காக போட்டியிடுவதற்கு முன்வருவாராக இருந்தால் எமது கூட்டணி அவரை பொதுவேட்பாளராக ஏற்றுக்கொண்டு ஆதரிப்பதற்கு தயாராக உள்ளது.
தற்போதைய நிலையில் நாம் ரணில் விக்ரமசிங்கவின் முடிவினை எதிர்பார்த்துள்ளோம். ஆகவே அவர் அதிபர் தேர்தலில் உத்தியோகபூர்வமாக போட்டியிடுவதாகவும் பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என்றும் அறிவிக்க வேண்டிய தீர்மானத்தினை எடுக்க வேண்டியவராக உள்ளார்.
அவரது முடிவுக்காக காத்திருக்கும் நாம், எமது பொது எதிரியான ஜே.வி.பியை தோற்கடிப்பதிலும் கரிசனைகளைக் கொண்டுள்ளோம்" என குமார வெல்கம தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |