உர இறக்குமதியில் மோசடி : சிக்கிய முன்னாள் அரச அதிகாரி
விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலவை (Mahesh Gammanpila) விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்றைய தினம் (28.04.2025) கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் சீனாவின் Qingdao Seawin Biotech என்ற நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தொகை தொடர்பிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு
சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற கரிம உரக் கையிருப்பு தொடர்பாக இடைநிறுத்தப்பட்ட கடன் கடிதங்களைத் திறக்க ஆலோசனை வழங்கியதன் மூலம் முதல் உரக் கையிருப்பில் 75%, அதாவது சுமார் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதால் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து மே மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
