ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கைது நகர்வை தடுக்க முன்னாள் புலனாய்வு அதிகாரியின் கோரிக்கை!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவர் முன்பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி, முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரான கே.எஸ். மத்துமகே தாக்கல் செய்த குறித்த முன்பிணை மனு தொடர்பாக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (07.10.2025) மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.
மேன்முறையீட்டுப் பிரிவின் தலைமை நீதிபதி ரோஹாந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்பிணை மனு
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், இந்த வழக்கில் பிரதிவாதிகளிடமிருந்து ஆட்சேபனைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அலி சப்ரி, இந்த வழக்கு தொடர்பான உண்மைகளை நிறுவ குறுகிய கால அவகாசம் வழங்குமாறு கோரினார்.
அதன்படி, உண்மைகளை நிறுவுவதற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடர்புடைய மனுவை விசாரணைக்கு அழைக்க உத்தரவிடப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவால் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் தான் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நியாயமான அடிப்படையும் இல்லாமல் தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
