முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பி இலஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார் !!
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரனின் தம்பி சதாசிவம் மயூரன் ரூபாய் 15 இலட்சம் வாங்கிய போது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
உணவகத்தில் வைத்து கைது
இன்று காலை மட்டக்களப்பில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வைத்து ரூபாய்15 இலட்சம் பணம் லஞ்சம் வாங்கும் போது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏராவூர்பற்றுப் பிரதேசசபைக்குட்பட்ட சித்தாண்டி என்ற இடத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட காணி ஒன்றில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை வழங்குவதற்கு இழுத்தடிப்பு செய்துவந்த சந்தேக நபர்கள் இருவரும், அதற்காக 15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியிருந்தனர்.
அவ்வாறு இலஞ்சம் கோரியவர்களில் ஒருவர் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பபினருமான சதாசிவம் வியாழேந்திரனின் சொந்த தம்பியான சதாசிவம் மயூரன். இவர் பிரதேசசபையின் ஆளும்கட்சி உறுப்பினர்.
மற்றவர் ஏறாவூர்பற்று பிதேச சபையின் D.O.வாகக் கடமையாற்றும் கமலக்கண்ணன். இவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் நெருங்கிய உறவினர்.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பி மயூரன் மற்றும் கமலக்கண்ணன் போன்றவர்களால் இலஞ்சம் கோரப்பட்டவர், கொழும்பில் உள்ள இலஞ்ச ஒழிப்பு திணைக்களத்திற்கு முறையிட்டதைத் தொடர்ந்து, கொழும்பில் இருந்து வந்த சிறப்பு இலஞ்ச ஒழிப்பு பிரிவினரே அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்ததாக இலஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் தெரிவித்தது.
மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல உணவகமான 'இப்ராஹிம் ஹொட்டேல்' என்ற உணவு விடுதியில் வைத்தே இவர்கள் இலஞ்சப்பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும், அந்த உணவு விடுதியில் தயார் நிலையில் மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாகவே அவர்களை கையும் களவுமாகப் பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏராளமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தொடர்பாகவும், அவரது தம்பி மயூரன் தொடர்பாகவும் படுகொலைக் குற்றச்சாட்டு உட்பட, மணல்கொள்ளை, இலஞ்சம், கப்பம் கோருதல் என்று ஏராளமான குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், வியாழேந்திரனின் தம்பி கையும் களவுமாகப் பிடிபட்ட முதலாவது சந்தரப்பம் என்று இதனைக் கூறமுடியும்.
இவர்கள் இருவரும் தற்பொழுது மட்டக்களப்பு குற்ற தடுப்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது .