வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் - எச்சரிக்கும் அமைச்சர்
இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் வெளிநாடுகளில் பதுங்கியிருந்தாலும் அவர்களைத் தப்பிக்கவிடப்போவதில்லை என்று அமைச்சர் ஹர்சண நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு - திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக நிகழ்வொன்றில் கலந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளை இந்த நாட்டிற்கு அழைத்து வரும் திட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
பெருமளவில் கைது
அழைத்து வரப்படுபவர்களைத் தடுத்து வைக்க எங்கள் நிறுவனங்கள் வசதிகளை வழங்குகின்றன. நாங்கள் போதைப்பொருட்களையும், போதைப்பொருள் வலையமைப்பை நடத்துபவர்களையும் பெருமளவில் கைது செய்கிறோம்.

இன்று, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசின் ஆதரவு இல்லை. அரசாங்கத்தால் சட்டங்களை இயற்றி, போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நிறுத்த முடியும்.
அதன் தேவையைத் தடுக்கத் தலையிடுவது சமூகத்தின் பொறுப்பாகும். அதற்காக சமூகம் இன்னும் அதிகமாகத் தலையிட வேண்டும்.
பிடியாணை பெற்ற நபர்
அதேபோன்று நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட வெளிநாடுகளில் உள்ள அரசியல்வாதிகளைத் திரும்ப அழைத்து வரும் செயற்பாடொன்றும் முன்னெடுக்கப்பட்டுளளது.

பிடியாணை பெற்ற அத்தகைய நபர்களைத் திரும்ப அழைப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் உள்ளன. குற்றவாளிகளுக்கு நாங்கள் தகுந்த தண்டனை வழங்கி வருகிறோம்.
குற்றவியல் வழக்குகளின் விசாரணை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. தலைமறைவாக இருப்பவர்கள் எப்போதும் தலைமறைவாகவே இருக்க முடியும் என்று நினைக்கக் கூடாது.
வெளிநாடுகளில் பதுங்கியிருந்தாலும் இலங்கையில் வழக்குகளுடன் தொடர்புடைய முன்னாள் அரசியல்வாதிகளையும் மிக விரைவில் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்போம். அவர்களைத் தப்பித்துக் கொள்ள விடமாட்டோம் என்றும் அமைச்சர் ஹர்சண நாணயக்கார தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 23 மணி நேரம் முன்