வெள்ளத்தின் போது நீதிமன்றில் இருந்து மாயமான மோட்டார்சைக்கிள்கள்! சிக்கிய இளைஞர்கள்
கண்டி நீதிமன்ற வளாகம் நீரில் மூழ்கியபோது வழக்குப் பொருட்களாக வைத்திருந்த இரண்டு உயர் சக்தி மோட்டார் சைக்கிள்களைத் திருடியதாகக் கூறப்படும் நான்கு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து கண்டி நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.
அப்போது, நீதிமன்ற வளாகத்தின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இந்த நாட்டில் ஓட்ட அனுமதிக்கப்படாத, 1000 குதிரைத்திறன் மற்றும் 600 குதிரைத்திறன் கொண்ட இரண்டு நவீன மோட்டார் சைக்கிள்கள், ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதாக கண்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
இது தொடர்பாக கண்டி தலைமையக காவல்துறையினரிடம் நீதிமன்றப் பதிவாளர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைதொடர்ந்து, காவல்துறையினர், கண்டி, கெட்டம்பே, கிரிபத்கும்புர மற்றும் மாவனெல்ல ஆகிய பகுதிகளில் சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |