புத்தாண்டு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த பரிதாபம்!
புத்தாண்டை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை காவல் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற மதுபோதையிலிருந்த சாரதி ஒருவரின் கார் மோதி இன்று (01) அதிகாலை இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் அம்பலாந்தோட்டை வளவை கங்கை பாலத்திற்கு அருகிலுள்ள வீதி சோதனை சாவடியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்பு
அம்பலாந்தோட்டை நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு ஆணையிட்ட போதும், அதனை நிறுத்தாமல் காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது மோதியதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் காவல்துறை கான்ஸ்டபிள் (82615) எம். சரத் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சூரியவெவ, வீரியகம பிரதேசத்தைச் சேர்ந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
இவர் எம்பிலிப்பிட்டி காவல் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில், நாளை மறுதினம் (03) அம்பலாந்தோட்டையிலிருந்து புறப்படவிருந்தாக கூறப்படுகிறது.
கைது நடவடிக்கை
மேலும், இந்த விபத்தில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்து அம்பலாந்தோட்டை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்ற கார் அம்பலாந்தோட்டை நகருக்கு அருகிலுள்ள பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன், காரில் பயணித்த சாரதி உட்பட இருவர் அம்பலாந்தோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் இருவரும் அதிகளவில் மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |