கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது
நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த நால்வரை குடிவரவு அதிகாரிகள் நேற்றுக் காலை (23) கைது செய்துள்ளனர்.
பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதும் நீதிமன்றத்தால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்ட மூவரும் சிறிலங்கா கடற்படையிலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய் ஒருவருமே வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.
விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விமானப் பயணத் தடை
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வென்னப்புவ உதசிரிகம காவல்துறை பிரிவில் வசிக்கும் 49 வயதான சுஜீவ பிரசன்ன பெர்ணான்டோ என்பவராவார்.
இத்தாலியில் வசிக்கும் குறித்த நபர் விடுமுறையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட போது தனது மகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு மீண்டும் இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
ஏனைய மூவரும் மன்னார் சிலாவத்துறை நீதவான் நீதிமன்றம் , நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சிறிலங்கா கடற்படை என்பவற்றால் விமானப் பயணத்தடை விதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)