மாணவர் விசாவிற்கு அனுமதி வழங்கிய பிரான்ஸ்! அறிமுகமாகும் புதிய முறைமை
30,000 இந்திய மாணவர்களை பிரான்சிலுள்ள அதன் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்விகற்க அனுமதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 30,000 இந்திய மாணவர்களை பிரான்சிற்கு உள்வாங்கவுள்ள பிரான்ஸின் திட்டத்தை அறிவித்துள்ளது.
இது இந்தியாவுடனான கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை பலப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது, பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ள இலட்சியமான திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, அவற்றில் உள்ள பல்வேறு அம்சங்கள் என்ன என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்திய மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்த விசா முறை, தற்போது எளிதாக்கப்பட்டு பிரான்ஸ் நீண்ட கால விசாக்களை வழங்குவதோடு, ஆவண தேவைகளையும் எளிமைப்படுத்தி வருகிறது.
மேலும், பிரான்ஸ் நாட்டில் முதுநிலைப் பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்றவர்கள் 5 ஆண்டு கால ஷெங்கன் குறுகிய தங்கல் விசாவைப் பெறலாம் என்றும் இதன் மூலம் பயணம் மற்றும் தொழில்முறை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.
பிரெஞ்சு மொழிப் பயிற்சி
மேலும், மொழிப் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு பிரான்ஸ் பல்வேறு துறைகளில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் சர்வதேச வகுப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
இதன் மூலம், முறையான பிரெஞ்சு மொழிப் பயிற்சி இல்லாத இந்திய மாணவர்கள் அதிக பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்க்கப்படவுள்ளதாகவும், இந்தியப் பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்றலை ஊக்குவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் அதிகரிப்பது இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்பது மாத்திரமன்றி உலகத் தரம் வாய்ந்த கல்வியும் பல்வேறு கலாச்சார அனுபவங்களும் இந்திய மாணவர்களுக்குக் கிடைக்கும் அதே நேரத்தில், பிரான்ஸ் நாட்டின் கல்வித் துறைக்கும் சர்வதேச அங்கீகாரத்திற்கும் ஊக்கமாக அமையும் எனவும் கூறப்படுகிறது.
இந்தோ - பசிபிக் பிராந்திரத்தில் உறவுகளை வலுப்படுத்தும் ஒரு மூலோபாய நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.
மேலும், கலாச்சார ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை பிரெஞ்சு அரசு அங்கீகரிப்பதனால், இளம் தலைமுறைகளிடையே ஆழமான இணைப்புகளையும் புரிதலையும் ஏற்படுத்தும் வகையில், கல்விச் சலுகைகள், மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன.
தங்குமிட வசதி
இந்திய மாணவர்களுக்கு வசதியான தங்குமிடம் கிடைப்பதை உறுதி செய்வதோடு, பிரெஞ்சு பல்கலைக்கழகங்களை அவர்களுக்கு இனிமையான சூழலாக மாற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை, குறிப்பாக பல்வேறு பின்னணிகளில் இருந்து வரும் இந்திய மாணவர்களிடையே ஏற்படுத்துவது அவசியமாக மாறியுள்ளது,
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இந்த திட்டத்தை "மிகவும் இலட்சியமான இலக்கு" என்று வர்ணித்ததோடு, “இதைச் செய்து முடிப்பதற்கு நான் உறுதியாக இருக்கிறேன்" என்று கூறினார், "இந்தியா இளம் மற்றும் இயக்கமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
அவர்களுக்கு திறமையான பணிகளை வழங்குவதற்கும், வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதற்கும் நல்ல கல்வி முக்கியம். அதே நேரத்தில், பிரெஞ்சு பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களின் பன்முகத்தன்மையால் செழிப்படையும்" என்று மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |