போராட்டங்களால் பற்றி எரியும் பிரான்ஸ்..! தடுமாறும் அரசு - களமிறங்கும் இராணுவம்
பிரான்ஸ் அரசாங்கம் எதிர்வரும் சனிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள புதிய போராட்டடங்களை எதிர்கொள்ள காவல்துறையினருடன் இராணுவத்தினரையும் களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் நாட்டின் பாரிஸ், மார்செய், லியோன் உள்ளிட்ட நகரங்களில் வெடித்த பெரும் அளவிலான கலவரங்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகளின் கடுமையான தோல்விகளை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டடங்களைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாரிய பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும், நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவருவதே அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமை எனவும் பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு குறைபாடுகள்
போராட்டக்காரர்கள் காவல்துறையினருடனான மோதல்கள், கார்கள் தீ வைத்துக் கொளுத்தப்படுதல் மற்றும் பொதுக் கட்டிடங்கள் சூறையாடப்படுதல் ஆகியவற்றுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட வார இறுதிக் கலவரங்களுக்குத் தனது பதில் நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்விகளை பிரான்ஸ் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

பாதுகாப்புத் திட்டமிடல்களில் குறைபாடுகள் காணப்பட்டதை ஒப்புக்கொண்ட உள்நாட்டு அமைச்சர் லொரன்ட் நூனெஸ், சம்பவங்கள் தொடர்பில் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும், தனது பங்கிற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் கூறி பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
இந்நிலையில் இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள மேலும் பல போராட்டங்களை முன்னிட்டு, காவல்துறையை வலுப்படுத்தவும், ஒரு மாபெரும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு உத்தரவுகள் செவ்வாய்க்கிழமை இரவும் நீடிக்கப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
பொருளாதாரத்தில் தாக்கம்
தொடரும் வன்முறைச் சூழல் பிரான்ஸின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் 10 ஆண்டு கால அரசுப் பத்திரங்களின் வட்டி விகிதம் 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், திருட்டு மற்றும் சொத்துச் சேதங்கள் காரணமாகப் பல மில்லியன் யூரோக்களை இழக்க நேரிடும் எனக் காஃபோர் பல்பொருள் அங்காடிச் சங்கிலி எச்சரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |