கோட்டாபயவின் பாதையிலேயே செல்லும் அநுர அரசு: சபையில் அடித்துக்கூறிய எம்.பி
அநுர அரசு தொடர்ச்சியாக மக்கள் ஆதரவை இழந்து வருகின்றது என்றும், கோட்டாபய ராசபக்ச சென்ற பாதையிலேயே இந்த அரசும் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "மூன்றில் ஒரு பங்கினால் மின் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது 50 சதவீதத்தால் கட்டணத்தை அதிகரித்துள்ளது.
வரிச் சுமைகள்
சுகாதாரம் மற்றும் கல்விக்கான 'வற்' வரிகளைக் குறைப்பதாகக் உறுதியளித்த போதிலும், இரு வரவு - செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வாழ விரும்பும் அழகான நாட்டை அமைப்பதாகக் கூறினார்கள். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. வரிச் சுமைகள் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அரசுக்கு எந்தக் கவலையும் கிடையாது என்றார்.
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி
இந்த அரசின் ஆட்சிக் காலத்தில் சுங்கத்திலிருந்து பரிசோதிக்கப்படாமல் 321 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை. ஹேக்கர்களால் 2.5 மில்லியன் டொலர் காணாமல்போயுள்ளது.

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் நாட்டுக்கு 18 ஆயிரத்து 368 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளது. இது மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை விடவும் பாரிய அளவிலான இழப்பாகும்.
மின்சாரம் தடைப்பட்டால் அரசே பொறுப்புக் கூற வேண்டும் என முன்னதாகக் கூறியவர்கள், ஆட்சிக்கு வந்த பின்னர் இருமுறை நாட்டில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், கொழும்புத் துறைமுக நகரத்திலிருந்து சீன முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். எமக்கு டொலர் தேவைப்படும் இந்த நெருக்கடியான காலத்தில் வந்த முதலீடுகளும் திரும்பிச் செல்வது பாரிய பின்னடைவாகும்." - என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |