அதிர்ஷ்ட வாகனம் என இலட்சக்கணக்கில் பணமோசடி - தமிழர் பகுதியில் சம்பவம்
தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு மக்களை ஏமாற்றி இலட்சக்கணக்கில் பணமோசடி செய்து ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரகம - அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு யாழ். விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உங்களுக்கு அதிர்ஷ்டம், பரிசுப்பொருள் கிடைத்துள்ளது என தொலைப்பேசிமூலம் தொடர்புகொண்டு மக்களை ஏமாற்றி இலட்சக்கணக்கில் பணமோசடி செய்து வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்ட வாகனம்

இவ்வாறு யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அதிர்ஷ்ட வாகனம் ஒன்று கிடைத்துள்ளதாக கையடக்கதொலைபேசி மூலம் உரையாடி Ez Case மூலம் 24 இலட்சம் ரூபா மோசடி செய்தமை தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டின்பேரில் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.
இப்படியாகப் பெரிய மற்றும் சிறிய தொகைகளில் ஏராளமானவர்கள் வடபகுதியில் ஏமாற்றப்பட்டுள்ளமை தெரியவருகிறது.
இந்த மோசடிக் கும்பலிடம் அகப்பட்டு ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறும், அவ்வாறான தொடர்புகள் கிடைக்கும் போது சாதுரியமாகச் செயற்பட்டு உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரிவிப்பது இவ்வாறான குற்றச் செயல்களில் மேலும் ஈடுபடுபவர்களை இனங்காண உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.