இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு இலவச விசா...இலங்கை அரசாங்கம் அறிவிப்பு!
இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா விசாக்கள் இலவசமாக வழங்கப்படும் என்பதை இலங்கை அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், நாட்டிற்கு பெருமளவு வருமானத்தை ஈட்டித் தரும் துறையாக சுற்றுலாத்துறை விளங்கியது, இதனால் அதனை வளப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என இலங்கை அரசு கடந்த ஆண்டு (2023) இறுதியில் அறிவித்தது.
இலவச விசா
இந்த சூழலில் வெளிநாட்டு நிறுவனத்தால் கையாளப்படும் விசாக்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது அண்மையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையிலேயே இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா விசாக்கள் இலவசமாக வழங்கப்படும் என்பதை இலங்கை அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் இலவச விசா சேவையை தொடர அரசு உறுதி பூண்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |