தமிழர் தாயக பகுதியிலும் களமிறங்கும் சுதந்திர கட்சி
நடைபெறவுள்ளதென எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு ,கிழக்கிலும் வேட்பாளர்களை நிறுத்துமாறு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசின் திட்டம் தோற்கடிக்கப்படும்
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் 5ஆம் திகதி தேர்தல் நடைபெறும் திகதி குறித்து வர்த்தமானியில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கம் தேர்தலை பிற்போட முயற்சித்தால் அரசின் திட்டம் தோற்கடிக்கப்படும்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணி ஆரம்பமாகியுள்ளது.வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் வேட்பாளர்களை நிறுத்துமாறு மத்திய குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.மற்ற மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஊடாகவே வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளோம்.
டலஸ் அழகப்பெரும குழுவுடன் கலந்துரையாடல்
இலங்கையில் உள்ள அனைத்து இடதுசாரி முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைக்க பார்க்கிறோம். டலஸ் அழகப்பெரும குழுவுடனும்,உத்தர லங்கா பேரவையுடனும் இது தொடர்பில் கலந்துரையாடினோம்.இறுதி கலந்துரையாடலை அடுத்த சில நாட்களில் முடித்துவிடுவோம் என்று நம்புகிறோம்.
ஆனால் நாடாளுமன்றம் 5ஆம் திகதி கூடும்.எப்படியாவது நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வரப்பட்டு தேர்தலை ஒத்திவைக்கும் வேலைத்திட்டமும் உள்ளது.அதை தோற்கடிக்க தேவையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது." என்றார்.
