உள்ளூராட்சி சபைத் தேர்தல் - தீவிரமாக ஆராயப்பட்ட விடயம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒற்றை மற்றும் விகிதாசார முறையிலான கலப்பு முறையின் கீழ் நடத்துவது குறித்து தேர்தல் சட்ட சீர்திருத்தத்திற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி 60 வீதமான பிரதிநிதிகளை ஒற்றை உறுப்பினர் முறையின் கீழும் 40 வீதமான பிரதிநிதிகளை விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழும் தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடியது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் அனைத்து அரசியல் கட்சிகளின் நியமனப் பட்டியலில் பெண்களுக்கு அதிக இடம் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு போனஸ் ஆசனம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்களில் தற்போதுள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் , இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்துமபண்டார, கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், எம்.ஏ. சுமந்திரன், மனோ கணேசன், மதுர விதானகே, தெரிவுக்குழுவின் செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணிமனைகளின் பிரதானி குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.