சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று (17) அதிகாலை மின்னஞ்சலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில வாரங்களாகவே போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் வழக்கம் அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை விமான நிலையம், தனியார் பள்ளிகள் உள்பட பல இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பதும் ஒவ்வொரு முறை மிரட்டல் வரும் போதும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்து வருவதும் வழக்கமாகி கொண்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
அதிரடி சோதனை
அந்த வகையில் சென்னை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை விமான இயக்குனர் அலுவலகத்துக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் சென்னை விமான நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல்
எனினும், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என்று நிபுணர்கள் சோதனையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னை விமான நிலையத்துக்கு உச்ச கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் சந்தேகப்படும் பயணிகளின் உடைமைகள் கூடுதலாக ஒரு முறை சோதனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |