அணு ஆயுதத்திற்கு கோடிக்கணக்கில் செலவிட்டுள்ள உலக நாடுகள்
உலக நாடுகள் சில கடந்த 2023ஆம் ஆண்டில் அணு ஆயுதத்திற்காக இந்திய ரூபாய் மதிப்பில் 7.6 இலட்சம் கோடி வரை செலவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா (India), சீனா (China), பிரான்ஸ் (France), இஸ்ரேல் (Israel), வடகொரியா (North Korea), பாகிஸ்தான் (Pakistan), ரஷ்யா (Russia), பிரித்தானியா (UK) மற்றும் அமெரிக்கா (United States) போன்ற நாடுகளே அணு ஆயுதத்திற்காக இவ்வாறான தொகையை செலவிட்டதாக சர்வதேச அணு ஆயுத ஒழிப்புக் குழு (ICAN) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் ஒரு நிமிடத்திற்கு 1.4 கோடி ரூபாயும், ஒரு நொடிக்கு 2.4 இலட்சம் ரூபாயும் உலக நாடுகள் செலவிடுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதிகபட்சமாக செலவு
மொத்தத் தொகையில் அதிகபட்சமாக அமெரிக்கா 4 இலட்சம் கோடி ரூபாய் வரை அணு ஆயுதத்திற்கு செலவு செய்ததாகவும், இது மற்றைய அனைத்து நாடுகளின் மொத்தத் தொகையை விட அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு மட்டும் அணு ஆயுதத்திற்கான செலவை அமெரிக்கா 80% அதிகப்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்ததாக சீனா 1 இலட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கியுள்ளதாகவும், அதற்கடுத்து ரஷ்யாவும், பிரித்தானியாவும் தோராயமாக 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
5 ஆண்டுகளில் 32 இலட்சம் கோடி ரூபாய் செலவு
இதில், இந்தியா 19 ஆயிரம் கோடி ரூபாய் வரை அணு ஆயுதத்திற்கு செலவிட்டுள்ளதாகக் கூறப்படுவதுடன் அயல் நாடான பாகிஸ்தான் 7.5 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், அணு ஆயுதத்திற்காக உலக நாடுகளால் 32 இலட்சம் கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக ஐசிஏஎன் தெரிவிக்கிறது.
அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் 9 நாடுகளும் நவீனமயமாக்கப்பட்டு வருவதால் அணு ஆயுதத்திற்கான செலவுகளையும் அதிகப்படுத்தி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |