லலித் - குகன் காணாமல் போன வழக்கு: சுற்றி வளைக்கப்படும் கோட்டாபய - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
லலித் குமார் வீரராஜு மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன வழக்கு தொடர்பில் கேள்விகள் கேட்கவில்லை என்றோ சம்பவங்கள் நினைவில்லை என்றோ தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிச கட்சியின் (FSP) நிர்வாகச் செயற்பாட்டாளர் புபுது ஜயகொட இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வலயம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
முந்தைய விசாரணையின் போது கேள்விகளுக்கு “எனக்குக் கேட்கவில்லை” அல்லது “எனக்கு நினைவில்லை” என மீண்டும் மீண்டும் கோட்டாபய பதிலளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2010 டிசம்பர் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் மற்றும் 16 ஆண்டுகள் கடந்தும் அவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை எனவும் ஜயகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்கள் கடத்தப்படவில்லை, கைது செய்யப்பட்டனர் என அப்போதைய அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்ததாகவும் அந்தத் தகவல் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச வழங்கியதன் அடிப்படையிலானது எனப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் கூறியதாகவும் ஜயகொட தெரிவித்துள்ளார்.
குமார் குணரட்னத்தின் கடத்தல் தமது அறிவுக்கு உட்பட்டே நடந்ததாக 2015 ஆம் ஆண்டு சத் ஹண்ட பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் கோட்டாபய தெரிவித்ததாக ஜயகொட சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில், லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டது குறித்து அவருக்குத் தெரியாமல் இருக்கக் காரணம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பழிவாங்குவதல்ல தங்கள் நோக்கம் என்றும் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான மக்களுக்காகவும் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |