விவசாயிகளுக்கு இன்று முதல் QR இன்றி எரிபொருள் : வெளியான தகவல்
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR முறையின்றி விவசாயிகளுக்கு இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் சந்தன தெரிவித்துள்ளார்.
கமநல சேவைகள் திணைக்களத்தினால் எரிசக்தி அமைச்சுக்கு வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலுக்கு அமைய இவ்வாறு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக சுமித் சந்தன ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எரிசக்தி அமைச்சுக்குக் கிடைத்துள்ள அனைத்துப் பட்டியல்களும் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு முன்னுரிமை
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெரிசல் காணப்படுவதால், விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு நிலைய உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரும் போக அறுவடையை ஆரம்பித்துள்ள விவசாயிகளும், சிறு போகத்தை ஆரம்பிக்கவுள்ள விவசாயிகளும் எவ்வித நெருக்கடியுமின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அறுவடை அல்லது நிலத் தயாரிப்புப் பணிகளுக்காக எரிபொருள் தேவைப்படும் விவசாயிகளின் விபரங்களை கமநல சேவை நிலையங்கள் ஊடாகப் பட்டியலிடுகிறோம். விவசாயிகளின் அனைத்துத் தகவல்களும் எம்மிடம் இருப்பதால் இந்தப் பட்டியலைத் தயாரிப்பது கடினமான காரியமல்ல.
அறுவடைப் பணிகளுக்கு எரிபொருள்
ஏற்கனவே அறுவடை செய்தவர்களைத் தவிர்த்து ஏனையோரின் விபரங்களை எடுத்து எரிசக்தி அமைச்சுக்கு அனுப்புகிறோம். அவர்கள் அதனை அந்தந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்புவார்கள்.

பட்டியலைத் தயாரிக்கும் போதே, விவசாயிக்கு இலகுவான எரிபொருள் நிரப்பு நிலையம் எது என்ற விபரத்தையும் பெற்றுக்கொள்கிறோம். விவசாயத் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைய, நாம் ஒரு குறிப்பிட்ட அளவைத் தீர்மானித்துள்ளோம்.
அதன்படி, அறுவடைப் பணிகளுக்காக ஒரு ஏக்கருக்கு 15 லீற்றரும், நிலத்தை பதப்படுத்தும் பணிகளுக்காக ஒரு ஏக்கருக்கு 30 லீற்றர் எரிபொருளும் QR முறையின்றி வழங்கப்படும்“ என அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |