ஆரம்பமானது எரிபொருள் விநியோகத்தில் புதிய நடைமுறை!! களத்தில் இராணுவமும் காவல்துறையினரும்
நாட்டில் எரிபொருள் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் டோக்கன் முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக நேற்றைய ஊடக சந்திப்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
ஒரு வாகனம் ஒரே நாளில் பல தடவைகள் எரிபொருளை பெறுவதை தடுத்தல், வரிசைகளை குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரதான நோக்கமாக கொண்டு குறித்த முறையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆரம்பமான புதிய நடைமுறை

இதன்படி, இராணுவம் மற்றும் காவல்துறையினரின் பங்களிப்புடன் மலையகம் உட்பட நாடு முழுவதும் இன்று (27) டோக்கன் வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் நகரிலுள்ள மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், எரிபொருள் பெறுவதற்காக வருகை தந்திருந்தவர்களுக்கு ‘ டோக்கன்’ வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக ஹட்டன் காவல்துறையினரால் குறிப்பு புத்தகமொன்றும் வழங்கப்பட்டுள்ளது. பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் என்பன அதன்மூலம் சேகரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்ப்பாணம் வடமராட்சி- நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் டோக்கன் வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        