ஓகஸ்ட் மாத எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை : வெளியான அறிவிப்பு
இலங்கையில் மேற்கொள்ளப்படும் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.டி. ராஜகருணா இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 414 ரூபாய் என்ற நிலையிலேயே தொடர்ந்தும் நிலவும் என குறிப்பிட்டார்.
பழைய விலையில் தொடரும்
அத்துடன், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 382 ரூபாயாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 495 ரூபாயாகவும் அதே விலையில் தொடர்கின்றது என அறிவித்தார்.

சுப்பர் டீசலின் விலை 478 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 285 ரூபாய் என்ற நிலையிலும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.
கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எரிபொருட்களின் மாதாந்த விலை தீர்மானிக்கும் காலப்பகுதியின் எஞ்சியுள்ள நாட்களில் சர்வதேச சந்தையில் நிலவும் சராசரி மசகு எண்ணெய் விலையின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும் என்பதால், அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுமா என்பதை இப்போது கூற முடியாதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையிலேயே நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த தருணத்தில் விலை உயருமா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் எங்களுக்கு இந்த மாதம் நிறைவடைவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன எனவும் அன்று அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |