எரிபொருள் வரிசை யுகத்துக்கு முடிவு - அமைச்சர் நாமல் வெளியிட்ட அறிவிப்பு
மக்களின் இன்னல்களில் இருந்து விடுபட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வரிசையில் காத்திருக்கும் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அரசாங்கம் தெளிவாக புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் வரிசையில் நிற்க அனுமதிக்கக் கூடாது எனவும், மக்களுக்கு போதிய எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்தியக் கடனில் நாட்டிற்கு போதுமான எரிபொருள் கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
எரிபொருள் கிடைத்த போதிலும் அது போதியளவு விநியோகிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சனி, ஞாயிறு, போயா விடுமுறை என்று பார்க்காமல் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்றும் அரச அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, எரிபொருளை முறையாக விநியோகிப்பது தொடர்பில் அரச தலைவர் சகல அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, எரிபொருள் வரிசைகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.