கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 19ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (5.11.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதிபதி மொஹமட் மிஹால் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முன்னாள் ஊடகத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், எவ்வித அவசியமும் இன்றி இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்காக சுமார் 990,000 ரூபா செலவில் 600 ஜி.ஐ. குழாய்களைக் கொள்வனவு செய்ததன் மூலம் ஊழல் குற்றத்தைப் புரிந்ததாக கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசியல் நடவடிக்கை
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான நிதியைப் பயன்படுத்தி அரசியல் நடவடிக்கைகளுக்காக 600 ஜி.ஐ. குழாய்களைக் கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இன்றைய விசாரணையின்போது மூன்று பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை டிசம்பர் 19ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |