1.7 இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு மாதாந்த ஓய்வூதியம்!
விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபையின் ஊடாக, 60 வயதைப் பூர்த்தி செய்துள்ள 170,950 விவசாயிகளுக்கு மாதாந்தம் 415 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகின்றது.
நாடு முழுவதும் உள்ள 3,975 தபால் நிலையங்கள் ஊடாக இந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகள் முன்னெடுக்கப்படுவதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய, 2024ஆம் ஆண்டுக்கு முன்னர் குவிந்திருந்த பெருமளவிலான விவசாய ஓய்வூதிய விண்ணப்பங்களுக்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
காப்புறுதிச் சபை
அதன்படி, குறைபாடுகள் இல்லாத வகையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஒரு மாதத்திற்குள் ஓய்வூதியம் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், முறையாகத் தவணைக் கொடுப்பனவுகளைச் செலுத்தாதவர்களிலும், 25 சதவீதத்துக்கும் அதிகமான தவணைகளைச் செலுத்திய பங்களிப்பாளர்களுக்குமான நிலுவைத் தவணைகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, 2014 ஜனவரி 1ஆம் திகதி முதல் 60 வயதைப் பூர்த்தி செய்த விவசாயிகளுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலுவை ஓய்வூதியக் கொடுப்பனவுகளை மீள வழங்கும் நடவடிக்கையையும் தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
மகா திறைசேரியினால் ஒதுக்கப்படும் நிதி ஏற்பாடுகளுக்கு அமைய, இந்த நிலுவைத் தொகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |