ஆறு நாட்களாக கடலில் காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பல்: வெளியாகிய காரணம்
கடந்த ஆறு நாட்களாக மசகு எண்ணெயை தரையிறக்காமல் கப்பல் ஒன்று கடலில் காத்திருப்பதாக தென்னிலங்கை ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 ஆம் திகதி சுமார் 100,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயுடன் இலங்கை கடற்பரப்பை வந்தடைந்த குறித்த கப்பலானது பணத்தை செலுத்தாத காரணத்தினால் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பணம் செலுத்த தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் கப்பலுக்கான தாமதக் கொடுப்பனவுகளை செலுத்த நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் எரிபொருள் விநியோகம்
எவ்வாறாயினும், முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் விநியோகம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கியூ.ஆர் முறை மூலம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 4000 மெற்றிக் தொன் டீசலையும், 3000 மெற்றிக் தொன் பெட்ரோலையும் விநியோகம் செய்கின்றது.
அதேவேளை, இந்தியன் எண்ணெய் நிறுவனம் நாளாந்தம் 4000 மெற்றிக் தொன் டீசலையும், 300 மெற்றிக் தொன் பெட்ரோலையும் விநியோகம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.