விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பால்மா தட்டுப்பாடு போல மீண்டுமொரு தட்டுப்பாடு இலங்கையில் ஏற்படவிருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.
இதுபற்றி அவர் இன்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, மிகவிரைவில் நாட்டில் டீசல் மற்றும் பெற்றோல் உட்பட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளாகிய சமையல் எரிவாயு, பால்மா ஆகியன இன்று மிகநெருக்கடியாகவே காணப்படுகின்றன. பாரிய தட்டுப்பாடும் நிலவுகின்றது. மக்கள் திரள் திரளாக நின்று வரிசையில் காத்திருந்து அவற்றைப் பெறுகின்றனர். இந்நிலையில் வருகின்ற நாட்களில் அரசாங்கத்தின் பலவீனமான பொருளாதார நிர்வாகத்தினால் எரிபொருளுக்கான தட்டுப்பாடும் ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு அந்நிய செவாவணி இருப்பு நெருக்கடி தொடர்ந்தும் அவ்வாறே இருந்தால் எரிபொருள் இறக்குமதியும் கட்டுப்படுத்தப்பட்டு இறுதியில் எரிபொருளுக்கான மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படலாம். அதனால் மக்கள் எரிபொருள் வரிசையிலும் காத்திருக்க நேரிடும். அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. உலகளாவிய வாழ்க்கை தரவுத்தளத்தின்படி, வாழ்க்கைச் செலவை மோசமாக நிர்வகிக்கும் ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
மேலும் கொவிட் 19 தொற்றுநோய் சம்பந்தப்பட்ட உச்சத்தை நோக்கி இலங்கை தள்ளப்படுகிறது. மேலும், வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமை இலங்கை மக்களை மரணத்தை நோக்கி தள்ளுகிறது, ”என்று பிரேமதாசா கூறினார்.
நாடு எதிர்கொள்ளும் பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி முடிவெடுக்க அனைத்து கட்சி மாநாட்டை கூட்டுவது பொருத்தமானதாக இருந்தாலும், அத்தகைய நடவடிக்கைக்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.
இது அரசாங்கத்தின் பிடிவாதமான அணுகுமுறையை தெளிவாகக் காட்டுகிறது என பிரேமதாசா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.