உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு சர்ச்சை : மீண்டும் அநுர வெளியிட்ட அறிவிப்பு
என்னதான் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(anura kumara dissanayake) மீண்டும் தெரிவித்துள்ளார்.
மன்னாரில்(mannar) இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர, தேசிய மக்கள் சக்தி கைப்பற்றாத உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படாது எனத் தெரிவித்ததாக வெளியான செய்தி பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.
இந்த நிலையிலேயே அநுராதபுரம்(anuradhapura) பகுதியில் நேற்று(25) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கைது
கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வாறானவர்களை மக்கள் முழுமையாகச் சுத்தப்படுத்துவார்கள்.
தற்போது ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ஒருவரை விசாரணைகளுக்கு முன்னிலையாகுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைத்துள்ளது.
நிதி வழங்கப்பட மாட்டாது
அத்துடன் கொள்ளை மற்றும் மோசடியில் ஈடுபடுவதற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கு மத்திய அரசாங்கத்தினால் நிதி வழங்கப்பட மாட்டாது என்றே தாம் குறிப்பிட்டிருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு இடம்பெறாது என கூறியதாக எதிர்க்கட்சியினர் கவலை வெளியிடுகின்றனர்.
ஆனால் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிச்சயமாக நிதி ஒதுக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
