குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு நீதி கிடைக்கும் என்று தமிழர்கள் நம்பவில்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களுக்கு 12 வருடங்கள் கடந்தும் நீதி பெற்றுக்கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கவலை வெளியிட்டுள்ளது.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட தமக்கு நீதி கிடைக்கும் என்பதை தமிழ் மக்கள் நம்பவில்லை என, அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத்தெரழவித்த அவர்,
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயத்தை பொறுத்தவரை இந்த பிரேரணை வந்தபோது தற்போதைய அரசாங்கம் மிக மோசமாக விமர்சித்தது. இந்த பிரேரணையை அரசாங்கம் நிராகரிப்பதாக கூறினர். முன்னைய அரசாங்கமும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இருந்து விடுபட இதனை பயன்படுத்திக்கொண்டனர்.
எவ்வாறு இருப்பினும் காணமால் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயம் மிகவும் முக்கியமானதாகும். இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கம் இருந்து இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இறுதியாக அவர்கள் வாக்குமூலம் கொடுப்பதை நிராகரிக்கும் நிலைமை உருவாகியது.
அதேபோல் இராணுவத்தை தண்டிக்க இடமளிக்க மாட்டோம் என சிங்கள அரசியல்வாதிகள் கூறிக்கொண்டிருந்தனர். அவ்வாறு இருந்தால் எவ்வாறு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும். தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாக காணாமால் ஆக்கப்பட்டமை குறித்து தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
முன்னைய அரசாங்கமும் இதனை சாதகமாக பயன்படுத்தி நெருக்கடியில் இருந்து தப்பிக்கவே முயற்சி செய்தனர். இப்போதுள்ள அரசாங்கமும் அவ்வாறான நடவடிக்கையே முன்னெடுத்து வருகின்றது. இறுதி யுத்தத்தில் மிக மோசமான அழிவுகள் ஏற்பட்டது.
இராணுவ அதிகாரிகள் தான் அதனை செய்தனர் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் குற்றம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தும் நிலைமை இருந்தும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியாது 12 ஆண்டுகள் கடந்துள்ளது. இது இனியும் தொடர்ந்தால் குற்றவாளிகள் ஒருபோதும் தண்டிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.