மக்களிடம் பொய் உரைக்கும் தமிழரசுக்கட்சி - சாடும் கஜேந்திரகுமார் எம்.பி
38 வருடம் நடைமுறைப்படுத்தாத 13ம் திருத்தத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தற்போது நடைமுறைப்படுத்த கோருவது ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்காகவே என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த அனைவரும் இணங்கியுள்ளதாக சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சிக்குள் முடக்கப்பட கூடாது
அதற்காக சி.வீ.கே.சிவஞானத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர அனைத்து தரப்புக்களும் போருக்கு பிந்தைய காலத்தில் ஒற்றையாட்சிக்குள் உள்ள 13ற்கு இணங்கியிருந்தன.
ஒற்றையாட்சிக்குள் முடக்கப்பட கூடாது. 13ஐ ஆரம்ப புள்ளியாக கொண்டு நகர்த்த முடியாது என சொல்லியே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறினோம்.
இந்நிலையில் அந்த உண்மையை மூடி மறைக்க நாங்கள் சமஷ்டிக் கட்சி எனவும் காங்கிரஸ் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டது எனவும் தமிழ் அரசுக் கட்சி கடந்த 16 வருடங்களாக மக்கள் மத்தியில் பொய் பரப்புரை செய்தனர்.
13ம் திருத்தத்தை ஏற்கவில்லை
13ம் திருத்தத்தை ஏற்கவில்லை என்ற பொய்யை தமிழ் அரசுக் கட்சி தலைவர் தனது அறிவுக்கு ஏற்ற வகையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
வழங்கிய கால கட்டம் மிக முக்கியமானது. இரண்டு கிழமைக்கு முன்னராக 2015 - 2019 காலத்தில் செய்யப்பட்ட ஏக்ய ராஜ்ஜிய வரைபை திருத்தி அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபோவதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்தில் தெரிவித்தனர்.
ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி வரைபை உருவாக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும் பங்கு வகித்தது. அந்த வரைவை நடைமுறைப்படுத்த ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அனுர குமார திஸாநாயக்க சொல்லியிருக்கிறார்.
ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி
அவ்வாறான தற்போதைய சூழலில் 13 ஐ கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் சொல்கிறார் என்றால் ஏக்ய ராஜ்ஜியவை எதிர்க்காமல் ஏக்கிய ராஜ்யவை கைவிட்டதாக சொல்லி கொண்டு அதே நேரம் ஏக்கிய ராஜ்ய வரும் போது எதிர்க்காமல் விடுவதற்கு யோசிக்கின்றனர்.
எத்தனையோ வருடங்களுக்கு பிறகு தமிழ் அரசுக் கட்சி தலைவர் நிருபித்தமைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இந்த வேளையிலே 38 வருடம் நடைமுறைப்படுத்தாத 13ம் திருத்தத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தற்போது நடைமுறைப்படுத்த கோருவது ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி முடக்குவதற்காகவே என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
