உள்ளூராட்சி சபை அமைப்பது தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி பகிரங்க அறிவிப்பு
பெரும்பாண்மையை பெறாத உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய பேரவையின் நிலைப்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது குறிப்பிட்ட அவர், “ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கடந்த உள்ளூராட்சித் தேர்தலை தம் தனியே சந்திப்பதற்குத் தீர்மானித்திருந்தார்கள்.
இணைந்து ஆட்சியமைப்பது
தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தமிழ்த் தேசிய பேரவையுடன் தேர்தலுக்குப் பின்னர் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து கூறியிருந்தார்கள்.
அந்தப் பின்னணியில் நாம் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியுடன் பேசி கொள்கையளவில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவதன் ஊடாக அதன் பின்னர் தமிழரசுக் கட்சியுடனும் பேசும் நோக்குடன் அவர்களை அணுகியிருந்தோம்.
இந்நிலையில் தாம் தமது பங்காளிக் கட்சிகளுடன் பேசி ஒரு முடிவை அறிவிப்பதாக சொன்ன போதும் எமக்கு ஒரு முடிவும் அறிவிக்கப்படவில்லை.
தமிழ்த் தேசிய பேரவை முன்னிலை
தமிழ்த் தேசிய பேரவை இத்தேர்தலில் பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை ஆகிய மூன்று சபைகளில் அதிகூடிய வாக்குகளுடன் வென்றிருக்கிறோம். ஊர்காவற்றுறையில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் தமிழ்த் தேசிய பேரவை முன்னிலை வகிக்கிறது.
அந்த வகையில் இந்த நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறோம்.
ஏனைய சபைகள் குறித்து இதுவரை மற்ற கட்சிகளுடன் எவ்வித புரிந்துணர்வும் எட்டப்படாத நிலையில், குறித்த சபைகளில் பெரும்பான்மை ஆசனங்களை எடுத்த தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு கோரப்படும் சபைகளில் ஆதரவு வழங்குவது எனவும், ஆதரவு கோரப்படாத இடங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிடாமல் இருப்பது எனவும் தீர்மானித்திருக்கின்றோம்.
இதேவேளை, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவை ஆகிய கட்சிகளுக்கு இடையில் கொள்கை ரீதியாக ஓர் இணக்கப்பாடு எட்டினால் ஒற்றுமை முயற்சியை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும்“ எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
