வசந்த முதலிகே உள்ளிட்ட காலி முகத்திடல் செயற்பாட்டாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!
காவல்துறை தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆறு பேரிற்கு வெளிநாடு செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.
இச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், அவர்களின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு கோட்டை காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிணையில் விடுதலை
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின், ரங்கன லக்மால், ஏரங்க குணதிலக்க, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஆகியோருக்கே இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளரான 'ரட்ட' என்ற ரவிந்து சேனாரத்ன, ரத்கரவ்வே ஜனரதன தேரர், நடிகர் ஜகத் மனுவர்ன, ஜோஹான் அப்புஹாமி உட்பட ஒன்பது பேர் கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.