கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை : கொலையாளி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்
கணேமுல்ல சஞ்சீவவின் (Ganemulla Sanjeewa) கொலையின் முக்கிய சந்தேக நபராக கைது செய்யப்பட்டவர் இராணுவ கமாண்டோ சிப்பாயோ அல்லது புலனாய்வு அதிகாரியோ அல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் அடிப்படைப் பயிற்சியை முடித்துவிட்டு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவர் ஒரு கமாண்டோ சிப்பாயோ அல்லது உளவுத்துறை அதிகாரியோ அல்ல என்றும் கூறப்படுகிறது.
இராணுவப் பயிற்சியின் போது தப்பிச் சென்ற குறித்த சிப்பாய், பின்னர் பொது மன்னிப்புக் காலத்தின் கீழ் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியுள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
கொலை செய்த நபர்
அன்றிலிருந்து அவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், சுமார் 6 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும், தெஹிவளை, வட்டரப்பலவில் நடந்த இரட்டைக் கொலையிலும் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் எண் நீதவான் நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், தற்போது சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபர் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, நீதிமன்றிற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி என்று காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் நேற்று (19) பிற்பகல் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல உண்மைகளை காவல்துறையினரால் வெளிக்கொணர முடிந்துள்ளது.
அடையாள அட்டைகள்
இது தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க, புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யப்பட்ட இந்த நபர் பல பெயர்களில் தோன்றியவர் என்று தெரிவித்தார்.
அவரிடம் பல அடையாள அட்டைகள் இருப்பதாகவும், அதில் ஒன்றில் சட்டத்தரணியாக பணிபுரிவதைக் குறிக்க தயாரிக்கப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டையும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.
அவர் முதலில் மொஹமட் அஸ்மன் ஷெரிப்தீன் என்ற பெயரில் தோன்றியதாகும், பின்னர் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தனராச்சி என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள்
கொடிகாரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க என்ற பெயரைக் கொண்ட போலியான சட்டத்தரணி அடையாள அட்டையையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதன்படி, எதிர்கால விசாரணைகளில், இந்த சந்தேக நபர் மற்றும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த அனைவரையும் பற்றிய உண்மையான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரியும், அவருக்கு உதவிய பெண்ணும் நீதிமன்றில் இருந்து தப்பிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
