மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் தீவிரமாக பரவியுள்ள கொரோனா
இலங்கையில் உள்ள மற்றுமொரு ஆடைத்தொழிற்சாலையில் உள்ள பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் இயங்கிவரும் மிகப்பெரிய ஆடைத்தொழிற்சாலைகளில் ஒன்றாகிய மாஸ் நிறுவனத்திலேயே பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இது தொடர்பில் மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய கண்டி பள்ளேகலை முதலீட்டு வலயத்தில் அமைந்துள்ள தமது கிளை தொழிற்சாலையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 49 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.
அதேபோல ஹங்வெல்ல, பாணந்துறை, துல்ஹிரிய உட்பட பல கிளைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும் ஏனைய ஊழியர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையிலேயே இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.