ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா பரவியது எவ்வாறு? உடன் விசாரணைக்கு உத்தரவு
துல்ஹிரிய எம்ஏஸ் ஆடைத் தொழிற்சாலையில் 400 தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானமை தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துமாறு தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தொழிலாளர் ஆணையாளர் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி சில்வாவுக்கு இன்று உத்தரவிட்டார்.
பரவலைக் கட்டுப்படுத்த தொழிற்சாலைகளில் சுகாதார பாதுகாப்பு குழுக்களை அமைக்க முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டபோதும் ஒரே தொழிற்சாலையில் இவ்வளவு எண்ணிக்கையான தொழிலாளர்கள் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டமானது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.
இதன்படி தொழிற்சாலையில் உடனடியாக ஒரு சுகாதாரக் குழுவை அமைத்து சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணையை ஆரம்பிக்குமாறு தொழிலாளர் ஆணையாளர் நாயகத்துக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
தற்போது செயல்பட்டு வரும் தனியார் துறை தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் இந்த சுகாதார குழுக்களை செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும் தனியார் துறை தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் பணி புரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நிவாரணம் மற்றும் சலுகைகளை வழங்க தனியார் துறையுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தொழிலாளர் ஆணையாளர் நாயகத்துக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.