யாழ் உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு...! லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக விற்பனை நிலையங்களுக்கு செல்லும் போது எரிவாயு சிலிண்டர்கள் இல்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலைமை காரணமாக நகரப்புறங்களில் வாழும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தட்டுப்பாடுமின்றி சந்தையில்
இந்நிலையில், சந்தையில் லிட்ரோ எரிவாயுவுக்கு நிலவும் அதிக கேள்வி மற்றும் நுகர்வோரின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, எரிவாயு விநியோகத்தைத் துரிதப்படுத்துவதற்கு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் 7 இலட்சத்தை இன்று (27) நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 22ஆம் திகதி நாட்டை வந்தடைந்த எரிவாயுக் கப்பல் மற்றும் நேற்றையதினம் (26) வந்தடைந்த கப்பலுக்கு மேலதிகமாக, GOODWILL என்ற கப்பலும் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி நாட்டை வந்தடைந்ததாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் எதிர்வரும் சில நாட்களில், வீட்டு உபயோக எரிவாயுவை எவ்வித தட்டுப்பாடுமின்றி சந்தையில் பெற்றுக்கொள்ள முடியும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |