பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் - அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
பாடசாலை மாணவர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற சிறந்த முகக் கவசங்களை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல் கோட்டேயில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்தள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், பிள்ளைகள் வைரஸிலிருந்து நூறு வீதம் பாதுகாப்பாக உள்ளார்கள் என்று கூற முடியாது. இவ்விடயத்தில் அதிக அவதானம் செலுத்த வேண்டும்.
இவ்வாறான பின்னணியில் பாடசாலை செல்லும் பிள்ளைகள் உள்ள பெற்றோர் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.
குறைந்தது 4 பிள்ளைகள் உள்ள குடும்பங்களில் முகக்கவசம் வாங்குவதில் கூட நெருக்கடி உள்ளது.
எனவே அவ்வாறானவர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற முகக்கவசங்களை இலவசமாக பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.