காசா மக்களுக்கான நிதியுதவி இடைநிறுத்தம் : நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் கவலை
பலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நா அமைப்பிற்கான நிதியுதவி இடைநிறுத்தத்தை அவுஸ்ரேலியா மற்றும் மேற்கத்திய நாடுகள் கைவிடவேண்டும் எனவும் மீண்டும் நிதியுதவியை வழங்குமாறும் நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலென் கிளார்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யு.என்.ஆர்.டபில்யூ.ஏ (UNRWA) அமைப்பின் உறுப்பினர்கள் ஹமாசுடன் இணைந்து இஸ்ரேலிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டனர் என வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவுஸ்ரேலியா உட்பட 9 நாடுகள் அந்த அமைப்பிற்கான நிதிஉதவியை இடைநிறுத்தியுள்ளன.
பலஸ்தீனிய அகதிகளுக்கு
காசாவின் மிகப்பெரிய சேவை வழங்குநராக பலஸ்தீனிய அகதிகளிற்கான ஐ.நா அமைப்பு காணப்படுவதால் அந்த அமைப்பிற்கான நிதி நிறுத்தம் காரணமாக பேரழிவு ஏற்படலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐ.நா அமைப்பில் 13ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர் ஆனால் 13 பேருக்கு எதிராகவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ஐ.நா அமைப்பிற்கான உதவியை நிறுத்தும் தீர்மானம் முற்றிலும் அளவுக்குமீறிய நடவடிக்கை எனவும் நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் எடுத்துரைத்தார்.
9 பேர் பணியிலிருந்து இடை நீக்கம்
அத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் 9 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துவிட்டார் எனவும் இருவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச்சாட்டுகளை கையாள்வதில் ஐ.நா மிகவும் தாமதமாக செயற்பட்டதன் காரணமாகவே அவுஸ்ரேலியா, அமெரிக்கா உட்பட நாடுகள் உதவிகளை நிறுத்தியுள்ளமை கூட்டு தண்டனை போல தோன்றுகின்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஐ.நா அமைப்பினை நிதி அடிப்படையில் முடக்கினால் காசாவில் வசிக்கும் குடும்பங்களிற்கு அது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |