பட்டினியில் வாடும் காசா மக்கள் : கடல் ஆமைகளை உண்ணும் அவல நிலை
பலஸ்தீன (Palestine) நகரமான காசா (Gaza) மீது இஸ்ரேல் (Israel) இயன்ற எல்லா வழிமுறைகளிலும் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
மக்கள் வசிக்கும் முகாம்கள், பாடசாலைகள் என குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் அதே சூழலில் காசாவுக்குள் எந்த உணவும், உதவிப் பொருட்களும் செல்ல முடியாதபடி பார்த்துக்கொள்வதில் இஸ்ரேல் தீவிரமாக இருக்கிறது.
இதன் விளைவாக, காசா மக்கள் அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
நிவாரண உதவி
குறிப்பாக, உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் காசாவுக்குள் செல்ல முடியாதபடி இஸ்ரேல் விதித்துள்ள கடுமையான முற்றுகை, அங்குள்ள மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் விசாரணையின்போது, அமெரிக்க வெளியுறவுத்துறையின் சட்ட ஆலோசகர் ஜோசுவா சிம்மன்ஸ் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் (UNRWA) செயல்பாடுகளை காசாவில் தடை செய்ய இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறியிருப்பது, காசா மக்களுக்கு செல்லும் உதவிகளை மேலும் தடுக்க வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் தொடர் தாக்குதல்
மேலும், தங்களது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் காசா மீனவர்கள் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது, அங்குள்ள பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துகிறது.
உணவுக்காக அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில், காசா மக்கள் தங்களது உயிரை தக்கவைத்துக் கொள்ள வேறு வழியின்றி கடலோரத்தில் ஒதுங்கும் கடல் ஆமைகளை உண்ணும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மீனவர் அப்துல் ஹலீம் கண்ணீருடன் கூறுகையில், "நான் ஒருபோதும் கடல் ஆமைகளை உண்ண வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவேன் என்று நினைத்ததில்லை. வேறு வழியில்லாத காரணத்தினாலேயே நாங்கள் அவற்றை சாப்பிடுகிறோம்" என்று தனது வேதனையை பகிர்ந்துகொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
