தலைவிரித்தாடும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : ஐம்பதாயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
இஸ்ரேல் (Israel) - ஹமாஸ் (Hamas) இடையிலான போரில், இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பலஸ்தீனத்தின் காசா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போா், கடந்த ஜனவரியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதுதொடா்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட இருந்தது. இதன்படி, முதல்கட்டத்தில் 42 நாட்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை
போா் நிறுத்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தை தொடங்கப்படாத நிலையில், நிரந்தரப் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன்பாக, கூடுதலாகப் பணயக் கைதிகளை விடுவிக்கும் அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேல் பரிந்துரையை ஹமாஸ் ஏற்கவில்லை.
இதையடுத்து, ஒப்பந்தத்தை முறித்த இஸ்ரேல், காசா மீதான தாக்குதலை அண்மையில் மீண்டும் தொடங்கியது.
காசாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். அவா்களில் ஹமாஸ் அரசியல் தலைவா், பெண்கள், சிறாா்கள் அடங்குவா்.
தரைவழி ஊடுருவல்
இதன்மூலம், இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது.
போரில் இதுவரை 50,021 பலஸ்தீனா்கள் உயிரிழந்ததாகவும், 1.13 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதுடன் வடக்கு காசாவுக்குள் இஸ்ரேலின் படைகள் தரைவழி ஊடுருவலைத் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
