மரண வலயமாக மாறிய அல் ஷஃபா வைத்தியசாலை
காசா நகரில் உள்ள அல் ஷஃபா வைத்தியசாலையை, மரண வலயம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு குறித்த வைத்தியசாலை கட்டடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளனர்.
மனித புதைகுழி
எறிகணை தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமைக்கான ஆதாரங்களை கண்டதாகவும் வைத்தியசாலையின் நுழைவாயிலில் பாரிய மனித புதைகுழியை அவதானித்ததாகவும் அந்தக் குழு கூறியுள்ளது.
அத்துடன் 80 பேரின் உடல்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தலைமையிலான குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் இருந்து அனைவரையும் வெளியேறுமாறு இஸ்ரேலிய படையினர் பணித்துள்ள நிலையில் மிகவும் கடுமையான சுகவீனமடைந்த 300 நோயாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்நிறுத்த அழைப்பு
தாம் உள்ளிட்டவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக அல் ஷிஃபா வைத்தியசாலையின் பணிப்பாளரான மொஹமட் அபுஷல்மியா கூறியுள்ளார்.
இந்த நிலையில் மீதமுள்ள நோயாளிகள் மற்றும்
ஊழியர்களை அவசரமாக காசாவில் உள்ள ஏனைய
வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடு செய்ய
முயற்சிப்பதாக கூறியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம்,
மேலும் மீண்டும் மீண்டும் போர்நிறுத்தத்திற்கு
அழைப்பு விடுத்துள்ளது.