தமிழ் தேசியத்தின் அடையாளமே பொது வேட்பாளர் : அரியநேத்திரன் சுட்டிக்காட்டு
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசியத்தின் அடையாளமாகவே நான் நிறுத்தப்பட்டிருக்கின்றேன் என தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (Pakkiyaselvam Ariyanethran) தெரிவித்துள்ளார்.
இன்று (23) ஆரம்பமான பொது வேட்பாளர் தேர்தல் பிரசார பயணத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் வேண்டுகோள் மற்றும் ஆதரவிற்கிணங்க நான் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.
முள்ளிவாய்க்காலில் ஆரம்பம்
எமது பிரசார பணியினை நாங்கள் ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்து விட்டோம். அதன் அடுத்த நிகழ்வாக இன்று முதல் பொலிகண்டியிலிருந்து பொத்துவில் வரையான ஒரு பிரசார பணியை ''நமக்காக நாம்'' எனும் கருப்பொருளை முன்வைத்து ஆரம்பிக்கப்படுகின்றது.
தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற விடயம் எனக்கான தேர்தல் பிரசாரமல்ல. ஏனைய பிரதான வேட்பாளர்கள் தங்களையும் தங்கள் பெயர்களையும் முன்னிலைப்படுத்தி தான் ஜனாதிபதியாக வந்தால் அதனைச் செய்வோம் இதனைச் செய்வோம் என்ற விடயங்களைக் கூறுகின்றார்கள். நாங்கள் அவ்வாறில்லை.
நான் இந்த தேர்தலில் தமிழ்த்தேசியத்தின் அடையாளமாக தான் நிறுத்தப்பட்டிருக்கின்றேன். அந்த அடையாள சின்னமாக சங்கு சின்னம் பொறிக்கப்பட்டிருக்கின்றது.
ஜனநாயக ரீதியிலான போராட்டம்
ஆகவே நாங்கள் நாங்களாக இருக்கின்றோமா அல்லது தமிழர்கள் தமிழர்களாக ஒன்றிணைகின்றோமா அல்லது முள்ளிவாய்க்கால் மௌனத்திற்கு பிற்பட்ட இந்த 15 வருட காலத்தில் எங்களை எவ்வாறாக சிதைத்திருக்கின்றார்கள் என்பவற்றை சிந்தித்து நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
சிங்கள தேசிய வாதம் தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக பல்வேறு முனைப்புகளை காட்டியிருக்கின்றார்கள். தமிழ்த் தேசியம் என்ற விடயம் சிதறிக் கிடக்கின்றது. அதை நாங்கள் ஒன்றுபடுத்த வேண்டிய தேவை இரு்ககின்றது.
அந்த அடிப்படையில் தான் இந்த தேர்தலையும் நாங்கள் ஒரு விதமான ஜனநாயக ரீதியிலான போராட்ட வடிவங்களில் ஒன்றாக பார்க்கின்றோம்.“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |