பொதுவேட்பாளர் சூழ்ச்சிக்குள் தமிழ் மக்கள் சிக்கிவிடக்கூடாது : ஈ.பி.டி.பி அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பங்காளிகளாக இருக்கவேண்டுமே தவிர பொதுவேட்பாளர் என்ற ஏமாற்று சூழ்ச்சியில் சிக்கிவிடக்கூடாது, என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (20.08.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளர் தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப்போகிறது என்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “பொதுக் கட்டமைப்பு என்று கூறிக்கொண்டு ஒப்பந்தம் செய்த கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இன்று தனித்தனியே ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்து வருகின்றனர்.
இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகமே தமிழ்ப் பொது வேட்பாளர்! சாணக்கியன் அதிரடி
சிவில் அமைப்பினர்
குறிப்பாக தமிழ் கட்சிகள் என்று கூறிக்கொண்ட சிலரும் சிவில் அமைப்பினர் என்று கூறிவரும் சிலரும் பொதுக்கட்டமைப்பு என்ற ஒரு வரைபை உருவாக்கி அதனூடாக இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனை வேட்பாளராக இழுத்துவைத்துள்ளனர்.
ஆனால் இப்பொது வேட்பாளர் குறித்து மக்கள் மத்தியில் எவ்விதமான கரிசனையும் இல்லை. ஏனெனில் பொதுக் கட்டமைப்பு என்றவர்கள் சோரம்போகின்றனர் என்பதும் இன்னுமொரு தென்னிலங்கை தேசியக் கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கு இவர்கள் வழிவகை அமைத்துக் கொடுப்பதற்கான முகவர்களாகவே இப் பொதுக்கட்டமைப்பு என்ற அமைப்பு இயக்கப்படுகின்றது.
ரணிலுக்கு ஆதரவு
இதேநேரம் அதை முன்னெடுத்தவர்கள் மத்தியிலும் தற்போது ஒருமித்த கருத்தும் இல்லை. அவர்கள் ஒப்பந்தங்கள் என்ற தந்திரத்தை செயற்படுத்தி, பின்னர் தனித்தனியே அணிகளாக செயற்படுகின்றனர்.
இதனூடாக தமிழ் மக்களுக்கு இவர்களால் எவ்வித அரசியல் வழிகாட்டல்களையோ அல்லது அவர்களுக்கான அரசியல் உரிமையையோ அபிவிருத்தியையோ முன்னெடுக்க முடியாது. மாறாக சுயநலன்களுக்கு சோரம்போகும் வழமையான செயற்பாட்டையே தற்போதும் அரங்கேற்றியுள்ளனர்.
எனவேதான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இந்த தேர்தலில் வெளிப்படையாக ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesingh) வாக்களித்து இந்த ஜனநாயககத் தேர்தலில் தமிழ் மக்களும் பங்காளிகளாகி தமது அரசியல் நலன்களுக்காக வாதாடுகின்ற அல்லது போராடுகின்ற அங்கீகாரத்தை பெறவேண்டும்.
எனவே இத்தேர்தலில் தமிழ் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வழிகாட்டலை பின்பற்றி ரணில் விக்கரசிங்க அவர்களின் “எரிவாயு சிலிண்டர்” சின்னத்திற்கு வாக்களித்து அவரது வெற்றியை உறுதிசெய்வதன் ஊடாக ஜனநாயகத்தின் பங்காளிகளாக இணைந்துகொள்ள வேண்டும்“ எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |