தேர்தல் காலத்தில் சிவஞானத்திற்கு வந்த ஞானம்
விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தவர்களில் 90 வீதமானவர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியினர் என்றும் போராட்டத்தில் தம்மை ஆகுதியாக்கியவர்கள் இலங்கை தமிழரசுக்கட்சிக்காரர்கள் என்றும் எனவே மாவீரர்களின் கட்சியான தமிழரசுக்கட்சியை அழிந்து போக இடமளிக்காதீர்கள் என்றும் அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் சீவிகே சிவஞானம்.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் வைத்தே இதனைத் தெரிவித்துள்ளார்.
என்ன அப்பட்டமான புளுகு இது. இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்களா போராட்டத்தில் தம்மை ஆகுதியாக்கினார்கள். ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் இரத்தத்தில் குளித்த இந்த மண்ணில் நின்று இப்படி வாய் கூசாமல் பேச சிவஞானத்திற்கு வெட்கம் வரவில்லையா என கேட்கிறார் முன்னாள் போராளி ஒருவர்.
மாவீரர்களின் கட்சி, கேட்கவே சிரிப்பாக வருகிறது என்கிறார் அவர்.
போராட்டம் ஒருபுறம் நடந்தாலும் சமநேரத்தில் அரசியலும் முன்கொண்டு செல்லப்பட வேண்டுமென்ற தீர்க்க தரிசனத்துடன் பல கட்சிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டதே தமிழ் தேசிய கூட்டமைப்பு.
அந்த கூட்டமைப்பு இவரின் கண்முன்னாலேயே சிதைக்கப்பட்டபோது இவர் வாளாவிருந்தார்.
அதேபோன்று இன்று தமிழரசுக்கட்சி சிக்கி சிதறி சின்னாபின்னமாகி நீதிமன்ற வாசல்வரை வந்து நிற்கும் போதும் கைகட்டி,வாய் பொத்தி பேசாமல் இருந்தார் இந்த சிரேஷ்ட துணைத்தலைவர்.
தனது கண்முன்னாலேயே கூட்டமைப்பு,கட்சி என சிதறுண்டபோது எதுவும் செய்ய லாயக்கில்லாதவர் இப்போது அப்பட்டமாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மாவீரர்களின் கட்சி, ஆகுதியானவர்கள் தமிழரசுக்கட்சியினர் என கதைவேறு அளக்கிறார்.
தேர்தல் வந்தால் சுடலை ஞானம் பலருக்கும் பிறக்கும் அதுதுான் இவருக்கும் பிறந்துள்ளதோ எனவும் அந்த முன்னாள் போராளி கேட்பதிலும் நியாயம் இருப்பதாகவே படுகிறது.