பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று (11) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக 349 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல்
இந்த நிலையில் 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேட்சைக் குழுக்களும் நேற்றைய தினம் (10) வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், பொதுத் தேர்தல் தொடர்பில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட வேண்டிய பணத்தின் அளவு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
விசேட பாதுகாப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்களிலும், இராஜகிரியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தைச் சுற்றியும் வேட்புமனு கையளிக்கும் காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் ஊடாக பொதுத் தேர்தலை ஒருங்கிணைக்க பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |