ரிஷாத் வீட்டில் உயிரிழந்த இஷாலினியின் பெற்றோர் எடுத்துள்ள புதிய நடவடிக்கை!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது தீ விபத்தில் உயிரிழந்த இஷாலினி என்ற 16 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்காக இஷாலினியின் பெற்றோர் நேற்று (20) கண்டியில் மனித உரிமை அமைப்பொன்றை நடத்திவரும் அருட்தந்தை நந்தன மனதுங்கவின் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளனர்.
தங்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடிகள் காரணமாக ஒரு தரகர் மூலம் மகளை வீட்டு வேலைக்காக ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு ஊழியராக அனுப்பியதாக சிறுமியின் தந்தை ஜெயராஜ் ஜூட் குமார் மற்றும் தாய் ராஜமணிக்கம் ரஞ்சனி ஆகியோர் கூறியுள்ளனர்.
ஐந்து பெண்கள் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் இஷாலினி மூன்றாவது பிள்ளை.
அவர் 25,000 ரூபாய் மாத சம்பளம் என்ற அடிப்படையில் வீட்டு வேலைக்காக சென்றாலும், மாதம் அவளுக்கு 20,000 மட்டுமே வழங்கப்பட்டது என்று தந்தை கூறினார்.
தனது மகள் வீட்டு வேலைக்குச் சென்று சுமார் 8 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், கொரோனா காலத்தில் ஏற்பட்ட தனது கணவரின் கடன்களை அடைப்பதற்காக மகள் அங்கு வேலைக்கு அனுப்பப்பட்டதாகவும் ராஜமணிக்கம் ரஞ்சனி கூறினார்.
மகள் வீட்டை விட்டு வெளியேறும்போது எந்த இளைஞனுடனும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவள் ஏழாம் வகுப்பில் மட்டுமே படித்தவள் என்றும் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அருட்தந்தை நந்தன மனதுங்க,
“சிறுமியின் மரணத்திற்கு அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். தோட்டப் பகுதிகளில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைதியாக இருக்காமல் நீதிக்காக குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.