யாழில் காதலனுக்காக சொந்த வீட்டில் திருடிய காதலி
யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த ரிக் ரொக் (TikTok) பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி (Chavakachcheri) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (28.07.2025) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரிக் ரொக் (TikTok) சமூக வலைத்தளத்தில் தனது காணொளிகளைப் பதிவேற்றி, பிரபலமாகத் தன்னைக் காட்டிக்கொண்டு வந்துள்ளார்.
ரிக் ரொக் காதலன்
இவர் ரிக் ரொக் மூலம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவருக்கு அறிமுகமாகி, அவரை காதலித்து வந்துள்ளார்.
அந்நிலையில், தனது காதலனுக்கு அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதற்காகவும், அவருக்கு சொகுசு வாழ்க்கையை வழங்குவதற்காகவும், யுவதி தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகைகளைத் திருடி, காதலனிடம் வழங்கியுள்ளார்.
வீட்டில் நகைகள் காணாமல் போனது தொடர்பாக, யுவதியின் பெற்றோர் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரித்தனர்.
காவல்துறை விசாரணை
அப்போது, யுவதி தான் நகைகளைத் திருடி காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டார்.
யுவதியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் காதலனை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, நகைகளைத் திருடிய யுவதி, அவரது காதலன், நகைகளைத் திருடுவதற்கு உடந்தையாக இருந்த யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், மற்றும் நகைகளை வாங்கியவர்கள் என மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஏழு நபர்களும் தற்போது சாவகச்சேரி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
